March 5, 2022 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான மனநல மீளாய்வு மன்றத்திற்கான நீதிமன்றம் மற்றும் அலுவலகத்தினை ஆட்சியர் சமீரன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மனநல மீளாய்வு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மையம் மாவட்ட நீதிபதியை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மீளாய்வு மன்றம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கான காப்பங்கள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணித்து ஆய்வு செய்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனை பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மனநலம் பாதிக்கப்பட்டு பராமரிக்க இயலாத நிலையில் உள்ள நபர்களுக்கு அரசு மற்றும் சட்டம் பாதுகாப்பு வழங்கும் என்பதே இம்மன்றத்தின் அடிப்படையான கருத்து ஆகும். நமது மாவட்டத்தில் மனநல மீளாய்வு மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நீதிபதி மற்றும் மனநல மீளாய்வு மன்ற தலைவர் ஜே.வி.ராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ரவி, மேற்கு மண்டல டிஐஜி முத்துச்சாமி, போலீஸ் துணை கமிஷனர் செல்வராஜ், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.