March 5, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும், மக்களாட்சியின் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்காகவும் ‘‘எனது வாக்கு எனது எதிர்காலம் – ஒரு வாக்கின் வலிமை” என்ற கருத்தினை மையமாகக் கொண்டு இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளான வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப்போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் போஸ்டர் வடிவமைப்பு போட்டி என ஐந்து பிரிவுகளில் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி முதல் துவங்கி நடத்தி வருகிறது.
இப்போட்டிகளில் வரும் 15ம் தேதி வரை அனைவரும் பங்கேற்கலாம்.
இப்போட்டிகளில் பற்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். மேலும், வினாடி-வினா போட்டியில் பற்கேற்று மூன்று நிலைகளை நிறைவு செய்பவர்களுக்கு மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்போட்டிகளில், கோவை மாவட்டத்திலுள்ள தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ – மாணவியரை ஊக்குவித்து அவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு கழகங்கள், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், தொழில் முனைவோர், இதர அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து வயது பொதுமக்கள் ஆகியோரும் பங்கேற்று கோவை மாவட்டத்திற்கு நற்பெயரினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.