• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தண்ணீர், எரிவாயு, மின்சாரம் எதுவும் வேண்டாம் !! அத்தியாவசிய தேவைக்கு அற்புத வழி

December 24, 2016 பி.எம்.முஹம்மது ஆஷிக்

ஒரு குடும்பத்திற்கு அடிப்படை தேவையாக விளங்குவது குடிநீர், மின்சாரம், கேஸ் தான். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் மாதாமாதம் தங்கள் குடும்ப பட்ஜெட்டில் இதற்கு என்று ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் தங்கள் குடும்பத்திற்கு தேவையில்லை என்கிறார் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஸ்ரீதரன். இவரது மனைவி புனிதா, மகள் தேவதர்சனா.

சோலார் மின்சாரம், பயோகேஸ் மற்றும் மழைநீரைக் குடிநீராக்கி வீட்டின் பட்ஜெட்டைக் குறைப்பது பத்தின கன்சல்டிங் தொழில் செய்துவரும் இவர் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்து தன் தேவை போக மீதமிருப்பதை தமிழக மின் வாரியத்திற்கு விற்பனையும் செய்கிறார். இதுமட்டுமின்றி தன் வீட்டில் விழும் ஒற்றை மழைத்துளியைக் கூட வெளி யேறவிடாமல் அதனை சேகரித்து சுத்திகரித்து குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வருகிறார். அதைபோல் காய்கறிக் கழிவுகள் மூலம் பயோ கேஸ் தயாரித்து சமையலுக்குப் பயன்படுத்துகிறார்.

இது குறித்து ஸ்ரீதரன் கூறுகையில்,

‘‘2007-ம் வருடம் தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, கோவையில் 15 நாளுக்கு ஒரு முறைதான் தண்ணீர் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண மழைநீரை சேமிச்சு குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்தலாம் என முடிவு செய்தேன். அதற்காக மொட்டை மாடியில் ரெண்டு தொட்டி மூலமாக 15,000 லிட்டர், வீட்டின் அண்டர் கிரவுண்ட் தொட்டி மூலமா 15,000 லிட்டர்னு மழைநீரை சுத்திகரிச்சு சேமிச்சோம். நீரை சுத்தப்படுத்த தேதங்க்கொட்டை, படிகாரக்கல் என இரண்டையும் சேர்த்து மழைநீர் சேமிப்பு தொட்டியில் போட்டேன். இந்த நீரை குடிப்பது போக மற்ற தேவைக்கும் பயன்படுத்திட்டு வருகிறோம். இப்படி சேமிக்க ஆரம்பித்ததிலிருந்து கேன் தண்ணீர், லாரித் தண்ணீர் வாங்குறதுனு எந்தத் தேவையும் இல்லாததால, மாதம் ரூபாய் 2,500 வரை மிச்சமாகுது!’’

சோலார் மின்சாரம் :

கடந்த சில வருடங்களுக்கு முன்பு யூ.பி.எஸ் சார்ஜ் செய்தால் கூட போதாத அளவு தமிழகத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு தொழில்கள் இருளில் மூழ்கின. இதற்கு மாற்றுவழியை தேட முயற்சி செய்த போது தான் வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் எடுக்க தொடங்கினேன். முதலில் 1000 வாட்ஸ் சோலார் பேனல்கள் அமைத்து ஒரு நாளைக்கு 3 முதல் 5 யூனிட் கரன்ட் கிடைத்தது. இதிலும், ஒரு சிக்கல் பகலில் மட்டுமே கரன்ட் கிடைக்கும். அதனால், ஒரு ‘விண்ட்’ (காற்றாலை) போட்டேன். கூடுதலா 2 யூனிட் கிடைச்சுச்சு. மொத்த மின்சாரத்தையும் பேட்டரியில சார்ஜ் பண்ணிடுவேன். மின்வாரியத்தோட மெயின் சுவிட்ச்சை ஆஃப் பண்ணிட்டு முழுக்க முழுக்க இந்த மின்சாரத்தையே பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஏசியைதவிர மற்ற எல்லா தேவைக்கும் இந்த மின்சாரமே போதுமானதாக இருந்தது. இந்த சூழலில் அக்கம் பக்கத்தில் பெரிய கட்டிடங்கள் வந்ததுவிட்டன. இதனால் கூடுதலா 2000 வாட்ஸ் சோலார் போட்டேன். இதனால் 10 முதல் 14 யூனிட் கிடைச்சுச்சு.

இதற்கிடையில், வீடுகளில் தயாரிக்கும் மின்சாரத்தை அரசுக்கு விற்கலாம் என்று கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தை 2014ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைக்கு கொண்டுவந்தது. ஒரு யூனிட் ரூ.7.10க்கு மின்சாரத்தை வாங்க அரசு சம்மதித்தது. பிறகு மின்சார அளவை பதிவு செய்கின்ற ‘நெட்மீட்டரை’ மாட்டினார்கள். இதனால் தினமும் சோலாரில் உற்பத்தியாகுற மின்சாரத்தில் எங்க தேவை போக மீதியிருக்கும் மின்சாரம் ஆட்டோமேடிக்கா மின்வாரியத்துக்குப் போயிடும். எத்தனை யூனிட் போகுகிறது என்பதும் பதிவாகிடும். ஓராண்டு கழித்து எவ்வளவு மின்சாரம் பதிவாகியிருக்கிறது என்பதை பார்த்து அதற்கான பணத்தை தந்துவிடுவார்கள். மாதத்திற்கு 350 முதல் 450 யூனிட் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்து வருகிறேன். வழக்கமா எனக்கு ரூ.1000 முதல் 2000 வரை பில் வரும். ஆனா கடந்த 5 வருஷமா 2 மாசத்துக்கு வெறும் 40 ரூபாய்தான் கரன்ட் பில் கட்டுறேன்.

பயோ-கேஸ்:

இன்றைய காலகட்டத்தில் கேஸ் இல்லாத வீடே இல்லை என்று கூட சொல்லலாம். பதிவு செய்து ஒன்றரை மாதம் கழிச்சுதான் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் வீட்டிற்கு வரும். சமயத்துல ரெண்டு மாதம்கூட ஆகிடும். அப்போதான், ஏன் எரிவாயுவையும் நாமளே தயாரிக்கக் கூடாதான்னு யோசிச்சேன். பின்னர் நாலு பேர் இருக்கும் வீட்டுக்குத் தேவையான 2 கியூபிக் (2,000 லிட்டர்) கொள்ளளவு கொண்ட ஒரு பயோகேஸ் பிளான்ட் அமைச்சேன்.

இதில், நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்திவிட்டு எச்சமாக எண்ணி தூக்கி எறியும் சாதம் வடித்த கஞ்சி, காய்கறிகள், பழங்களின் தோல், மற்றும் மாட்டு சாணத்தையும், நாள்பட்ட பால் பொருட்களையும் ஒரு பெரிய தொட்டியில் போட்டு மூடி வைத்தேன். அவை மக்கும்போது பாக்டீரியாக்களால் உண்ணப்பட்டு நமக்கு மீத்தேன் எரிவாயு கிடைக்கிறது. புளிப்பு சுவைகொண்ட உணவுப் பொருட்கள்ல இருந்து மிகக் குறைவான அளவு பயோகேஸ் கிடைப்பதையும், பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகை உணவுப் பொருட்கள்ல இருந்தும், இனிப்பு உணவுப் பொருட்களில் இருந்தும் அதிகமான பயோ கேஸ், வேகமா உற்பத்தி ஆனதையும் அறிந்து தற்போது அவற்றை அதிமாக பயன்படுத்தி வருகிறேன். கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்றுவரை எங்கள் வீட்டிற்கு பயோ-கேஸை பயன்படுத்தி வருகின்றேன். இதையறிந்த கல்லூரி மாணவர்கள் பலர் என்னிடம் வந்து இதை கற்றுச் சென்று வருகின்றனர். அதைபோல், பல கல்லூரிகளில் பையோ-கேஸ் குறித்த வகுப்பும் எடுத்து வருகிறேன்.

ஒவ்வொரு தேவைக்கும் அரசை எதிர்பார்த்து இருப்பதைவிட நமக்கு தேவையான மற்றும் நம்மால் உருவாக்க முடிந்தவற்றை நாமே தயாரித்து பயன்படுத்துவதன் மூலம், ஏழை மக்களுக்கு அரசின் சலுகைகள் எளிதில் சென்றடையும், அதோடு பொருட்களுக்கான தட்டுப்பாடும் குறையும். இயற்கை சார்ந்து தான் நாம் இருக்கிறோம்.வீணாகும் மழைநீரை சேமித்து நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற இந்த இயற்க்கை வளத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம் என்றார் ஸ்ரீதர்.

மேலும் படிக்க