March 12, 2022 தண்டோரா குழு
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘‘நான் முதல்வன்” என்கிற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த 1ம் தேதி சென்னையில் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் துவக்கி வைத்த போது கோவை மாவட்டத்தில் உள்ள 83 அரசு உயர் நிலைப்பள்ளிகளிலும், 22 அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகளிலும், 97 தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளிகளிலும் மாணவ – மாணவியர்களுக்கு நேரலையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
மேலும் 113 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 41 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும்,3 மத்திய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 306 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் என மொத்தம் 665 பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவியர்களுக்கு நேரலையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இதனிடையே இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி அவர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ”நான் முதல்வன்” திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு கோவை அரசு பள்ளி மாணவ – மாணவியர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.