March 13, 2022 தண்டோரா குழு
கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்) மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை மண்டலம் சார்பில் கண் அழுத்தநோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
கண் அழுத்த நோய் ‘பார்வையின் மௌனமான திருடன்’ என்று அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் உயர்ந்த கண் அழுத்தம் கண்களின் பார்வை நரம்பை சேதப்படுத்துவதோடு நிரந்தர கண் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். கண் அழுத்த நோயே பார்வையின்மைக்கு இரண்டாம் முக்கிய காரணமாகும் மற்றும் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் படி இந்தியாவில் கண் அழுத்த நோயின் பாதிப்பு 2.6 சதவீதம் ஆகும்.இது பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே உலக கண் அழுத்த நோய் அமைப்பு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தை “உலக கண் அழுத்தநோய் வாரம்” என கடைபிடிககின்றனர்.
உலக கண் அழுத்த நோய் வாரத்தை கொண்டாட கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்) இன்று மார்ச் 13, 2022 ஞாயிற்றுக்கிழமை கோவை மண்டல இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை சார்பில் ஆர்விஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
இந்த பேரணியை,சிஎஸ்ஓஎஸ் தலைவர் டாக்டர். ரோட்னி,செயலாளர் டாக்டர்.ராஜேஷ் பிரபு, பொருளாளர் டாக்டர்.ஜெ.சரவணன் மற்றும் கோயம்புத்தூர் மண்டல இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர்.சத்யன்,செயலாளர் டாக்டர்.மகேஷ்வரன் மற்றும் பொருளாளர் டாக்டர்.சீரமலிங்கம் உட்பட மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் கோவை 6வது ஏர்போர்ஸ் மருத்துவமனையின் கமான்டிங் ஆபிசரும் நிர்வாக இயக்குனர் மருத்துவமனை நிர்வாகம் (எய்ம்ஸ்) டாக்டர்.இனியந்த் கபீர் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இது குறித்து கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்) தலைவர் டாக்டர். ரோட்னி, செயலாளர் டாக்டர். ராஜேஷ் பிரபு, ஆகியோர் கூறுகையில்,
ஒரு சாதாரண ஆரோக்கியமான கண் ஆக்வஸ் ஹ்யூமர் என்ற திரவத்தை சுரக்கிறது, அது சுரக்கும் விகிதத்திலேயே வடிகிறது.இதில் ஏற்றதாழ்வு ஏற்படும் போது கண்ணுக்குள் உள்ள அழுத்தம் அதிகரிக்கிறது.இது பார்வை நரம்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தி பார்வை இழப்புக்கு வழிவகுக்கிறது.
இன்றைய கண் அழுத்த நோய் விழிப்புணர்வு ஓட்டம் ஆரம்பத்திலேயே கண் அழுத்த நோய் அறிகுறிகளை தெரிந்து கொள்ள மற்றும் அதைக் கட்டுப்படுத்தவும் கண் பரிசோதனை என்ற ஒரே வழியை பற்றி பொதுமக்களுக்கு வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டது.
40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒற்றை தலைவலி கொண்டவர்கள்,அடிக்கடி தங்கள கண்ணாடிகளை மாற்றுபவர்கள்,மைனஸ் பவர் லென்ஸ்களை உபயோகிப்பவர்கள்,அடிக்கடி ஸ்டெராய்டுகள் பயன்படுத்துபவர்கள்,மிக முக்கியமாக கண் அழுத்த நோய் கொண்ட குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள்,பொதுவாக கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளனர்.
ஒரு விரிவான கண் பரிசோதனையில் கண் பார்வை சோதனை,ஒரு பிளவு விளக்கு பரிசோதனை, உள் விழி அழுத்த பரிசோதனை மற்றும் ஆப்டிக் டிஸ்க் மதிப்பீடு ஆகியவை கொண்டதாகும்.இது கண் அழுத்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கும் மற்றும் சிகிச்சையையும் உறுதி செய்யும், இதன் மூலம் மீளா பார்வை இழப்பைத் தடுக்கிறது.
கண் அழுத்த நோய்க்காக கண் சொட்டு மருந்திடுதல், லேசர் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கண் அழுத்தத்தை குறைக்க மற்றும் ஏற்கனவே உள்ள நரம்பு மற்றும் பார்வையை பாதுகாக்க உதவும் ஆனால் இழந்த நரம்பையோ அல்லது பார்வையையோ மீண்டும் பெற உதவாது என்று சிஎஸ்ஓஎஸ் சொசைட்டி வலியுறுத்துயது.நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்டது போல் மருந்தை உபயோகப்படுத்த வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கை முழுவதும் ஒரு கண் அழுத்த நோய் ஆலோசகரிடம் ஒரு வழக்கமான கண் அழுத்தநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறினர்.