March 14, 2022 தண்டோரா குழு
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணை கோவை மாநகரின் 30 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதரமாக உள்ளது. இதுதவிர வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் சிறுவாணி அணை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியது. சிறுவாணி அணை 49 அடி உயரம் கொண்டது. இருப்பினும் கோவையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வெயில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 26.83 அடியாக சரிந்துள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ ஒரே மாதத்தில் சிறுவாணி அணையில் இருந்து 13 அடி அளவுக்கு தண்ணீர் குறைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து தினமும் 97 எம்.எல்.டி.முதல் 103 எம்.எல்.டி. வரை குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் அணையில் இருந்து தினமும் 59.62 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் 51.87 எம்.எல்.டி. கோவை மாநகருக்கும் மீதமுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.