March 15, 2022 தண்டோரா குழு
விவசாய நிலங்களில் உள்ள வரப்புகளை உயர்த்த தமிழக அரசு திட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சில ஆண்டுகளாக வேளாண்மை தொழில்நுட்ப பிரிவு மூலமாக வழங்கப்பட்டு வந்த விவசாய பொருட்களான மண்வெட்டி, தார்பாய், கொத்து போன்றவைகள் இலவசமாக மற்றும் மானிய விலையில் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டம் சார்பாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தொடர்ந்து விவசாயிகளுக்கு இந்த பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதனிடையே தற்போது தமிழக அரசு சார்பாக விவசாயிகளுக்கு இந்த விவசாய பொருட்கள் மானிய விலையில் எந்த தடையும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிக்கு விவசாயிகள் சங்கம் சார்பாக நன்றி.மேலும் மாநில அரசு சார்பாக விவசாய நிலங்களில் வரப்புகளை உயர்த்துதல் தொடர்பாக திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதனை மாநில அரசு மூலமாகவே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.