March 16, 2022 தண்டோரா முழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆட்சியர் தெரிவித்ததாவது:
உணவு பொருட்களை மட்டுமே தரத்தை பார்த்து வாங்கக்கூடாது.எந்த பொருட்களை வாங்கினாலும் அதில் ஒட்டப்பட்டுள்ள விலைபட்டியல், பொருளின் தரம், தயாரிப்பு தேதி, காலவதி தேதி போன்றவற்றை கவனமாக பார்த்து தரமான பொருட்களை வாங்க வேண்டும். தவறான விளம்பரங்களால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து அனைத்து தரப்பு மக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
எந்த பொருளை நாம் வாங்குவதாக இருந்தாலும் அல்லது சேவையாக இருந்தாலும் அதில் குறையிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய சட்டப்படி நுகர்வோர் அனைவருக்கும் உரிமை உண்டு.பொருட்களை நுகர்வோர் வாங்கும்போது கட்டாயம் அதற்கான ரசீது வழங்க வேண்டியது அப்பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரரின் கடமை ஆகும்.
அதைபெறுவது நுகர்வோரின் உரிமையாகும்.
நுகர்வோர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது குறித்து கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரம் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நுகர்வோர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறந்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கு சான்றிதழ்களையும், விருதுகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மேனகா, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.