March 17, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 24 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 17.84 லட்சம் நபர்கள் பயன் அடைந்துள்ளனர் என கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேயர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 99.4 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 88.1 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15- 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 66 முதல் தவணை மற்றும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 683 சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றம் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 46 ஆயிரத்து 898 நபர்கள் பயனடைந்துள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 24 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 17.84 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.
தற்போது 12-14 வயதில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிரத்தியேகமாக கோர்பிவேக்ஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.இதில் கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 200 சிறார்கள் பயனடைய உள்ளார்கள்.இந்த தடுப்பூசி நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் இரண்டாம் தவணை 28 நாட்கள் கழித்து வழங்கப்பட வேண்டும். இதற்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.