March 19, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் ரூ. 33 ஆயிரம் கோடி அளவிற்கு வேளாண்மை துறையில் பட்ஜெட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதை முழு மனதாக வரவேற்கிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையே தனி பட்ஜெட்டு தான். தேனி வளர்ப்பு, காடுகள் வளர்ப்பு, உழவர்சந்தை மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதை பாராட்டுகிறோம்.
கோவையை மையப்படுத்தி தென்னை நல வாரியம் உருவாக்கப்பட வேண்டும். கோவையில் அதிக அளவில் கருவேப்பிலை உற்பத்தி செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் அதில் இடம் பெறவில்லை. கருவேப்பிலை மையம் கோவையில் அமைக்கப்பட வேண்டும்.
பாக்கு, மஞ்சள், திரட்சை, வெங்காயம் வளர்ப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எண்ணெய் வித்துகள், பருப்புகள், உணவு பூங்கா போன்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கது. கோவையில் காய்கறி மையம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நீராதாரங்கள் பெருக்குவதற்கும், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு, கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்போர் குறைந்து வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டு. சூரிய காந்தி உற்பத்திக்கு வெளியீட்டுள்ள அறிவிப்புக்கு வரவேற்பு. பம்புசெட் மானியம் கூடுதலாக்கப்பட வேண்டும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 200 வேளாண்மை பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்க தொகை வழங்கப்படும், வேளாண் சார்ந்த தொழில் உருவாக்க கடன் திட்டம் போன்றவைகள் மிகவும் வரவேற்கதக்கது.
செல்போன் மூலம் பம்புசெட் இயக்கம் என்பது மிகவும் புதிய திட்டம். இளம் விவசாயிகள் உருவாக இது போன்ற பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.