March 21, 2022 தண்டோரா குழு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
அப்போது,ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது.2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.
சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டேன்,மறுநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்று அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன்; அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கும் கோப்பில் நானும் கையெழுத்திட்டுள்ளேன்.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார்? என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என ஆணையத்தில் ஓ. பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார்.