March 22, 2022 தண்டோரா குழு
கோவை அடுத்த அன்னூரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை இறக்கி விட்டு உறுதி மொழி ஏற்க வைத்து அன்னூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து கோவை மாவட்டம் அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தது.அப்போது, அந்த பேருந்தின் படிக்கட்டுக்களில் மாணவர்கள் உட்பட இளைஞர்கள் பயணித்து வந்துள்ளனர்.
இதைப்பார்த்த அன்னூர் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவல்துறையினர், பேருந்தை நிறுத்தினர்.படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள அனுமதித்த, பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தலா 600 ரூபாய் அபராதம் விதித்தனர்.மேலும் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் உட்பட இளைஞர்களை கீழே இறக்கி அறிவுரை கூறிய காவல்துறை,பேருந்தில் படியில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம் எனவும்,மீறி பயணித்தால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் எனவும் உறுதிமொழி ஏற்க செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அன்னூரில் கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருவதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக அன்னூர் காவல்துறை இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.