March 22, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்துறையின் சார்பில் ‘போஷன் பக்வாடா’ குறித்த உறுதிமொழியினை ஆட்சியர் சமீரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட பணிகள் திட்டத்தின் கீழ் ‘போஷன் பக்வாடா’ நிகழ்ச்சி கடந்த 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் முதல் வாரம் ஆரோக்கியமான குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்தல் மற்றும் விவரங்களை ‘போஷன் டிராக்கர்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
இரண்டாவது வாரம் நீர் மேலாண்மை திட்டத்தில் பெண்களின் பங்கு,வளர்இளம் பெண்களின் ரத்த சோகை குறித்தும் விழ்ப்புணர்வு முகாம்கள் நடத்துதல்,மலைவாழ் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாரம்பரிய வகை சரிவிகித உணவு பற்றிய விழிப்புணர்வு முழுமையாக சென்றடைய பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா,திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்அண்ணா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர்(பொ) ஸ்டெல்லா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.