March 22, 2022 தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது.
அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால், தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படுகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில்,
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்தை தடுக்க 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் ஒன்று அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் குப்பைக் கிடங்கை கண்காணிக்க காவலாளிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.