March 23, 2022 தண்டோரா குழு
உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு அரசியல், சினிமா, இசை, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி வெளியிட்டுள்ள பதிவில்,
“மனித குலம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு மண்ணை பாதுகாப்பது தீர்வை தரும்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுடன் சத்குருவுடன் கலந்துரையாடிய வீடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி:
சமீபகால வரலாற்றில் சத்குரு அளவிற்கு பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை முன்னெடுத்த வேறு எந்த நபரும் என் நினைவில் இல்லை. சத்குரு இந்த 100 பைக் பயணத்தில் நீங்கள் நலமாகவும், ஆரோக்கியத்துடன் இருக்க என்னுடைய வாழ்த்துக்கள். மண்ணை காக்கும் இந்தப் பயணத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்
நடிகர் சந்தானம்:
மண் இல்லாமல் நாடு இல்லை. மண் இல்லாமல் மனித உயிர் இல்லை. நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே இந்த மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது தான். நாம் இறந்த பிறகு மண்ணுக்குள் தான் போக போகிறோம். அப்படிப்பட்ட மண்ணின் வளம் மிகவும் குறைந்து கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அடுத்த 25 வருடத்தில் 40 சதவீதம் உணவு உற்பத்தி குறைந்துவிடும் என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இனி வரும் தலைமுறையினர் உணவு பற்றாகுறை எதிர்கொள்ளும் நிலையும், சத்தற்ற உணவுகளை சாப்பிட வேண்டிய நிலையும் உருவாகி கொண்டு இருக்கிறது.
எனவே, இதற்காக #மண்காப்போம் என்ற இயக்கத்தை சத்குரு தொடங்கி உள்ளார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் லண்டனில் இருந்து தமிழ்நாடு வரை தனி ஆளாக 100 நாட்கள் பைக்கில் பயணிக்க உள்ளார். உலகளவில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மண் வளத்தை மீட்டெடுக்கவும் அவர் இப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த நல்ல செயலை செய்யும் சத்குருவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் மண் காப்போம் இயக்கத்தை ஆதரிக்கிறேன். ஆகவே, நீங்களும் இனி வரும் தலைமுறையினருக்கு ஒரு வளமான மண்ணையும் நாட்டையும் கொடுக்க இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளியுங்கள். நன்றி
பாடலாசிரியர் பா.விஜய்:
மண் காப்போம் எனும் தலைப்பில் சத்குரு முன்னெடுத்திருக்கும் மிகப்பெரிய முயற்சி உலக மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கின்றேன்.
ஏனென்றால், மண் தான் மனிதனின் ஆதாரம். இந்த மண் தான் ஒட்டு மொத்த மானுடத்தின் சிகரம். இந்த மண்ணை காக்க ஒரு பெரிய பேரியக்கத்தோடு எடுத்துள்ள முயற்சி கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேரும். இதன் மூலமாக ஒரு பெரிய மறுமலர்ச்சியும், மண் புரட்சியும் ஏற்படும் என நம்புகின்றேன். அதனால் இந்த இயக்கத்திற்கு என்னுடைய வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். நன்றி
நடிகை ரகுல் ப்ரீத் சிங்:
மண் வளத்தை பாதுகாப்பதற்காக 6 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சத்குரு தனது 65 வயதில் 100 நாட்கள் இடைவிடாமல் 27 நாடுகளுக்கு பைக்கில் பயணிக்க புறப்பட்டுள்ளார். இது சரித்திரம் இல்லை என்றால், வேறு எது சரித்திரம்! சத்குரு நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம்:
நான் உட்பட நம்மில் பலரும் மண் வளம் இழந்து மணலாக மாறி வருவது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நிலங்கள் விவசாயம் செய்வதற்கு தகுதியற்றதாக மாறி வரும் செய்திகளை தொடர்ந்து கேட்டு வருகிறோம். விவசாயிகளின் தற்கொலை உட்பட பல விஷயங்கள் இதனுடன் தொடர்புடையவை.
மண் வளம் இழப்பது என்பது மனித குலம் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாகும். இது நாம் செயல்படுவதற்கான தருணம். இல்லாவிட்டால், நம்முடைய எதிர்கால தலைமுறை நம்மை மன்னிக்காது.
சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கம் ஒரு உலகளாவிய இயக்கம். உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்த்து மண்ணுக்காக குரல் கொடுக்க தொடங்கப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கம் மண் வளத்தை காக்க உரிய சட்டங்கள் இயற்ற உலக நாடுகளின் தலைவர்களை வலியுறுத்த உள்ளது. இது ஒரு மக்கள் இயக்கம். நீங்கள் அனைவரும் என்னுடன் இணைந்து இவ்வியக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மண் வள பாதுகாப்பு குறித்து நாம் முதலில் தெரிந்து கொள்வோம். பின்னர், அதை நம்மால் முடிந்த அனைவருக்கும் பகிர்வோம்.
இவர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், எழுத்தாளர் டோனி ராபின்ஸ், பின்னணி பாடகர்கள் கார்த்திக், வேல்முருகன், மங்கலி, இயக்குநர் வசந்த், நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பலர் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.