March 24, 2022 தண்டோரா குழு
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் மிகவும் குறைந்து விலை ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனையானது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகளும், மக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இதனிடையே மழை குறைந்து கால சூழ்நிலை மாறியதை அடுத்து தமிழகத்தில் தக்காளி விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு தற்போது இதன் காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை மிகவும் குறைந்து உள்ளது. தற்போது தக்காளி விலை கிலோ ரூபாய் 2 அல்லது ரூபாய் 4 க்கு விற்பனையாகிறது.
விவசாயிகளுக்கு தக்காளி விளைச்சல் செய்யும் போது ரூபாய் 10 ரூபாய் வரை செலவாகும் நிலையில் வெறும் நான்கு ரூபாய் மட்டுமே கிடைப்பதால் மிகுந்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் தக்காளி விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமலே தோட்டத்திலேயே அழுக விடுகின்றனர். சில இடங்களில் டிராக்டர்களை கொண்டு விவசாய நிலங்களில் தக்காளி செடிகளை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து டி.கே.மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,
“தக்காளி விலை அதிகமாக விற்கப்பட்ட காரணத்தினால் விவசாயிகள் அதில் நல்ல லாபம் கிடைக்கும் என்று எண்ணி அதிக அளவில் தக்காளி விவசாயம் செய்தனர். இதன் காரணமாக விளைச்சல் அதிகரித்து தற்போது தக்காளி கிலோ ரூ.2 அல்லது ரூ.3 வரை மட்டுமே விற்பனையாகிறது. விவசாயிகள் தக்காளியை பறித்து அதை வாகனத்தில் அனுப்பி மார்க்கெட்டில் விற்பனை செய்து பெறப்படும் தொகை சுத்தமாக கட்டுப்படி ஆகவில்லை. இதனால் விவசாயிகள் மட்டுமல்ல வியாபாரிகளும் நஷ்டம் அடைகின்றனர்.
இந்த விலை குறைவு காரணமாக விவசாயிகள் பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் மீண்டும் தக்காளியை பயிரிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அடுத்த இரண்டு மாதங்களில் விளைச்சல் குறைந்து தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது. ரூ. 100 வரை கிலோவிற்கு விற்பனை ஆகும். அப்படி உயரம் போது உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும். அப்போது விலை அதிகமாக இருக்கும். இதனால் வட மாநில விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
விலை குறையும் போது தமிழக விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.விலை ஏறும்போது வடமாநில விவசாயிகள் பயன் பெறுகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு சீரான விலை ஒவ்வொரு மாதமும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு கிடைக்க திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். இதனால் தமிழக விவசாயிகள் பயன் பெறுவார்கள், வியாபாரிகளும் நன்மை அடைவார்கள்,” என்றார்.