March 24, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க(டேக்ட்) கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு ஆகஸ்டு வரைக்கான ஜி.எஸ்.டி. செலுத்த காலதாமதமாக வசூலிக்கப்படும் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.ஜாப் ஆர்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள ஆர்டர்கள் தரும் நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கும் பொருட்களுக்கான பில் தொகை 90 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை காலம் தாமதம் செய்து தருவதால் தான் குறு, சிறு தொழில் முனைவோர்களால் அரசு நிர்ணயித்த தேதியில் ஜி.எஸ்.டி. செலுத்த முடியாமல் காலம் தாழ்த்தி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.
ஜி.எஸ்.டி. வரியை காலம் தாழ்த்தி செலுத்திய போதும் அந்த தாமதத்துக்கு அடுத்து வரும் மாதங்களில் கால தாமதத்துக்கான தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ.50 செலுத்தி உள்ள சூழ்நிலையில் கடந்த 2017 முதல் 2021 வரைக்கான அபராத வட்டியை செலுத்த சொல்லி அதிகாரிகள் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு, மூலப்பொருட்கள் விலையேற்றம் உள்பட பல்வேறு காரணங்களினால் கடும் நெருக்கடியான சூழ்நிலை நிலவுவதால் அரசு ஜி.எஸ்.டி.க்கான அபராத வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.