March 25, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றவேண்டும் என்பதே ஆகும்.
இத்திட்டமானது வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை,வேளாண் பொறியியல் துறை,விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை,வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை,மின்சாரவாரியம், எரிசக்தி துறை, பட்டு வளர்ச்சிதுறை, கைத்தறி,கதர் துறை, முன்னோடி வங்கி, வனத்துறை ஆகியன துறைகளுடன் ஓருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீர் வழித்தடங்களை தூர் வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்ட செயல்பாட்டினை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் சமீரனை தலைவராகவும், வேளாண்மை இணை இயக்குநரை உறுப்பினர் செயலாளராகவும்,இதர துறையினரை உறுப்பினராகவும் கொண்ட மாவட்ட அளவிலன கண்காணிப்பு குழு கூட்டம் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான கூட்டமும் நடந்தது.
வேளாண்மை துறை மூலம் இத்திட்டத்தின் கீழ் தார்பாலின் விநியோகம், நெற்பயிரில் உற்பத்தி திறனை அதிகரிக்க ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் விநியோகம், பனை மேம்பாட்டு இயக்கம், வேளாண் உபகரணங்கள் தொகுப்பு விநியோகம் திட்டம் மற்றும் தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் இத்திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.