March 25, 2022 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 22 வது பட்டமளிப்புவிழா பி.எஸ் .ஜி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.272 இளங்கலை, 17 முதுகலை மற்றும் 5 முதுகலை டிப்ளமோ பட்டதாரிகள் பட்டங்கள் பெற்றனர்.
பி. எஸ். ஜி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். ஏ. ஜெயசுதா வரவேற்புரையாற்றி, பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு பிரமாணத்தை வழங்கினார். பி. எஸ். ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் பட்டதாரிகளை வாழ்த்தி தலைமையுரையாற்றினார்.பட்டதாரிகளுக்கு ஆர்வம், விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்கும் திறன் தேவை என்று தெரிவித்தார். அவர் அவர்களின் மருத்துவ திறன்களை மேம்படுத்தி சமூகத்திற்கு சிறந்த சுகாதார செவிலியராக விளங்க வேண்டும் என்றார்.
விழாவின் சிறப்பு விருந்தினர் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர்டாக்டர். பி. வி. விஜயராகவன் பட்டதாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். அப்போது அவர் , நோயாளிகளைப் பராமரிப்பதில் செவிலியர் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த தொற்றுநோய் காலங்களின் போது முன்னணி வீரர்களாக செயல்பட்ட செவிலியர்களை பாராட்டி, பட்டதாரிகள் தங்கள் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமையை மேம்படுத்த வழியுறுத்தினார்.
2015 ஆம் ஆண்டு மாணவி அனுசுயா.ஏ , 2016ம் ஆண்டு மாணவி க்ரிபா எல்சா மாத்தியூ, 2017 ஆம் ஆண்டு மாணவி நிஷ்மிதா விக்டர் ஷீபா, மிகச்சிறந்த மாணவ மாணவிகளுக்கான பட்டதாரி விருதை பெற்றார்கள். மேலும், பல்வேறு சிறப்பு விருதுகளும் உரிய மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
விழாவின் போது “அழகியல் காவியம்” என்ற கல்லூரி இதழ், சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது. விழாவானது ஒருங்கிணைப்பாளர் திருமதி பூர்ணிமா மேரி ரோட்ரிகஸ், துறை தலைவர், சமூக நல செவிலியர் துறை அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுற்றது. பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் முன்னாள் மாணவ சங்கத்தின் ஒன்றிணைதல் சந்திப்பு நடைப்பெற்றது. 1995 ஆம் ஆண்டு படித்த மாணவர் அமெரிக்கா டெக்ஸாஸ்
சிரோனா ஹெல்த் கேர் மகேஷ் பிள்ளை தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
“உலகளாவிய செவிலியர்களாவதற்கான வழிமுறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 300 மாணவர்கள் பங்கேற்றனர்.