March 27, 2022 தண்டோரா குழு
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கோவையில் தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமுமுகவினர் கோவை சாயிபாபா காலனி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதை கண்டித்தும், இத்தடையை விலக்க கோரியும், கண்டன முழக்கங்களை எழுப்பினர். நாட்டில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் பழனி பாரூக், மாநில தொண்டரணி செயலாளர் சர்புதீன்,தமுமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர் ரசிதா பேகம், தமுமுக கிளை செயலாளர் ஹிகானா சித்தீக்கா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துணைத் தலைவர் சிராஜ்தீன்,தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல்,மமக மாவட்ட துணை செயலாளர் இப்ராஹிம்,பஷீர், நூறுதீன், கருணாநிதி நகர் கிளை தலைவர் இப்ராஹிம்,அக்பர்,சுபேர், யூனுஸ், சலாம்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.