December 26, 2016 தண்டோரா குழு
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் தமிழ்நாடு விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையில் இச்சங்கங்கள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அனுமதியின்றி ஊர்வலமாக வந்த காரணத்தினால் 30 க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.