March 28, 2022 தண்டோரா குழு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில்
கோவையின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ சேவையினை வழங்கிடும் வகையில் ‘நடமாடும் இலவச மருத்துவ சேவை (Mobile Clinic)’ திட்டத்தின் ‘துவக்க விழா’ இன்று (27-03-2022, ஞாயிறு) மாலை 5 மணியளவில் போத்தனூர் சாலையில் உள்ள PVG மஹாலில் நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் துவக்கவுரை நிகழ்த்தினார். இதில் ஜமாஅத்தே இஸ்லாமி கோவை நகரில் மேற்கொண்டு வரும் பல்வேறு சேவைப் பணிகளுடன் நடைமுறைக்கு வரயிருக்கும் நடமாடும் இலவச மருத்துவ சேவையின் தேவையினை அவர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ சிறப்புரை நிகழ்த்தினார். மக்கள் சேவையில் எடுபடுவது என்பது ஒவ்வொருவருக்கும் நிரந்தரமான நன்மைகளை ஈடித்தருவதுடன் இறைவனின் உவப்பையும் பெற்றுத் தருவதாக அமைந்திடும் எனக் குறிப்பிட்டார்.
கிராமப்புற எளிய மக்களுக்கு பயனளிக்கும் இந்தத் திட்டத்தினை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஜி. சமீரன், I.A.S., வாகனத்தின் சாவியை வழங்க ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமூக மேம்பாடு மற்றும் கட்டமைப்பிற்காக ஜமாஅத்தே இஸ்லாமி மேற்கொள்ளும் மக்கள் சேவைப் பணிகளை வெகுவாக பாராட்டினார்.
மேலும், கோவையின் வளர்ச்சிக்கு சமூக நல்லிணக்கத்தை பேணுவதன் அவசியத்தையும், அதற்கு இதுபோன்ற மக்கள் சேவைப் பணிகளில் அனைத்து தரப்பினரும் கரம்கோர்த்திட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்விற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசினை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ மற்றும் மாவட்டத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் வழங்கி கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஜி. சமீரன், I.A.S., அவர்கள் இத்திட்டத்தினை கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அற்பனித்தார்.