March 28, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் தேசிய குடற்புழு நீக்க வாரம் கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து நகர்நல மையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற்றது.
மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாமும் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த முகாம்களில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ½ மாத்திரை அல்பெண்டசோல் 200 மில்லி கிராம் (பொடியாக) வழங்கப்பட்டது. 2 வயதிற்கு மேல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை அல்பெண்டசோல் 400 மில்லி கிராம் வழங்கப்பட்டது.
இது தவிர 20 முதல் 30 வயதுடைய பெண்கள் அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட்டது. கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘குடற்புழு நீக்க மருந்து 4.47 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் சுமார் 90 ஆயிரம் பேருக்கும் மருந்து வழங்கப்பட்டது,’’என்றார்.