April 2, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் சொத்து வரி, காலியிட வரி தொழில் வரி, குடிநீர் கட்டணம்,பாதாள சாக்கடை வரி உட்பட 7 வகைகளில் 9 லட்சத்து 63 ஆயிரத்து 887 வரி விதிப்பு இனங்கள் இருந்தன.இவற்றில்,கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.339 கோடியே 60 லட்சம் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதோடு நிலுவையில் உள்ள ரூ.395 கோடியே 13 லட்ச ரூபாயையும் சேர்த்து வசூலிக்க பணிகள் நடைபெற்றன.இறுதியாக, நடப்பு வரியில் 253 கோடியே 11 லட்சமும்,நிலுவை வரியில் ரூ.95 கோடியே 12 லட்சம் என மொத்தமாக ரூ.348 கோடியே 23 லட்சம் மொத்தமாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக நிலுவை வரியில் 24.07 சதவீதமும்,நடப்பு வரியில் 74.53 சதவீதமும் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி மூன்று பிரிவாக பிரித்து வரி வசூல் நடைபெற்றது. முன்னதாக இவற்றில் ரூ.158 கோடியே 20 லட்சம் நிலுவை அடிப்படையிலும், ரூ.206 கோடியே 33 லட்சம் நடப்பு அடிப்படையிலும் வசூலிக்க வேண்டியிருந்தது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையால் நடப்பு அடிப்படையில் ரூ.173 கோடியே 48 லட்சமும், நிலுவை அடிப்படையில் ரூ.40 கோடியே 40 லட்சம் என மொத்தமாக ரூ.213 கோடியே 96 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக நிலுவையில் 25.59 சதவீதமும், நடப்பில் 84.08 சதவீதமும் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.இதில்,மத்திய மண்டலத்தில் மட்டும் நிலுவையில் ரூ.13 கோடியே 6 லட்சமும், நடப்பு அடிப்படையில் ரூ.47 கோடியே 24 லட்சமும் என மொத்தமாக ரூ.60 கோடியே 31 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்தில் நிலுவை ரூ.14 கோடியே 91 லட்சமும், நடப்பு ரூ.42 கோடியே 31 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் நிலுவையில் ரூ.3 கோடியே 33 லட்சமும், நடப்பில் ரூ.30 கோடியே 13 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது.வடக்கு மண்டலத்தில் நிலுவை ரூ.3 கோடியே 54 லட்சமும், நடப்பில் ரூ.33 கோடியே 4 லட்சமும், தெற்கு மண்டலத்தில் நிலுவையில் ரூ.5 கோடியே 62 லட்சமும், நடப்பில் ரூ.20 கோடியே 74 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.