December 26, 2016
சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்து வந்த “வேதா இல்லத்திற்கு” அளிக்கப்பட்டு வந்த காவல்துறை உயர் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து, அங்கு தனியார் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக,ஜெயலலிதாவிற்கு “இஸட் பிளஸ்” பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வந்தது. மேலும், முதலமைச்சர் என்பதால், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது, அவருக்குப் பல்வேறு உதவிகளை மேற்கொள்வதற்காக அவரது தோழி சசிகலாவும் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து தற்போது போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வசித்து வருகிறார். எனினும், அவர் கட்சியிலோ, ஆட்சியிலோ எந்தப் பொறுப்பிலும் இல்லை. இருப்பினும், போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு 250 போலீஸ் பாதுகாப்பு எதற்காக போடப்பட்டுள்ளது என தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் பகுதியில் தமிழக காவல் துறையின் பாதுகாப்பு இன்று குறைக்கப்பட்டுள்ளது. போயஸ் கார்டனின் நுழைவுப் பகுதியில் மட்டுமே சில காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கண்காணிப்புப் பணியில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அந்த வழியாக செல்லும் யாரையும் அவர்கள் சோதனையிடுவதில்லை.
இதனால், போயஸ் கார்டன், வேதா இல்லத்திற்கு, தற்போது ‛ லிங்க் செக்யூரிட்டி ஏஜென்சி’ என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு, மூன்று ஷிப்ட் என, 216 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.