April 6, 2022 தண்டோரா குழு
கோவை மாநகர டவுன் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பேருந்து பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசின் போக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முதல்கட்டமாக சென்னையில் நகர பேருந்துகளில் சிசிடிவி கேரமாக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கோவை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் டவுன் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் சுமார் 2100 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் முதல்கட்டமாக சுமார் 1000 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் பெண் பயணிகளின் பாதுகாப்பு பெருமளவு உறுதி செய்யப்படும்.
மேலும் திருட்டு கும்பல்கள் ஏதேனும் பிட்பாக்கெட் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கூட சிசிடிவி கேமரா உதவியுடன் அக்கும்பல்களை கண்டறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்