April 6, 2022 தண்டோரா குழு
கோவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக இதுவரை நில உரிமையாளர்களுக்கு ரூ.600 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் தற்போது 607 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு விமான ஓடுதளம் 9 ஆயிரத்து 900 அடி மட்டுமே உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விமான ஓடுதளத்தை 12 ஆயிரத்து 500 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமான ஓடுதளத்தை உயர்த்துவதற்கு 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில் 134 ஏக்கர் நிலம் பாதுகாப்பு துறைக்கும், 28 ஏக்கர் நிலம் மானாவாரி நிலமாக உள்ளது. மீதம் உள்ள 465 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட வேண்டும். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு ரூ.1,150 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பொதுமக்களிடம் இருந்து 465 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில் இதுவரை 263 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.600 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக கூடுதலாக நில அளவையர்கள், வருவாய் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிலம் இழப்பீடு வழங்க தேவையான நிதியை அரசு ஒதுக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.