April 9, 2022 தண்டோரா குழு
பைஜூஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரானது எனவும் எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் வருகின்ற 16ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போரைக் காரணம் காட்டி பெட்ரோல் டீசல் விலை உயர்த்துவது சரியல்ல எனவும்,மத்திய அரசு கூறியதால்தான் சொத்து வரியை உயர்த்துகின்றோம் என மாநில அரசு கூறுவது நியாயமல்ல எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சொத்து வரி உயர்த்துவதை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது எனவும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் மாநில அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் பயிற்சி நிறுவனங்கள் டியூசன் சென்டர்களை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் எனவும் டியூஷன் சென்டர்கள் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை எனவும் கேள்வி எழுப்பினார். மழலையர் பள்ளிகள் துவங்குவதற்கு கூட பல்வேறு விதிமுறைகள் இருக்கும் பொழுது டியூசம் சென்டர்கள் உட்பட பயிற்சி வகுப்புகளை ஏன் வரையறை படுத்தவில்லை எனவும் உடனடியாக வரையறை படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் இணைந்து தனியார் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான கோடி முதலீடு செய்து டியூஷன் சென்டர்கள் நடத்துவது புதிய கல்விக் கொள்கைக்கு எதிரானது எனவும் புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தி விட்டு பைஜூஸ் போன்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவது கல்விகொள்கைக்கு எதிரானது எனவும், 112 மாவட்டங்களில் நிதி ஆயோக் பைக் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிப்பது மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கையை சிதறடிக்கும் செயல் எனவும் விமர்சித்தார்.
எனவே மத்திய அரசு இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இலங்கையில் அரசியல் ஸ்திரம்மற்ற சூழல் நிலவி வருகின்றது அங்கு ஏழை எளிய மக்கள் பட்டினி சாவு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்த அவர் இலங்கையில் வாழும் தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றும், அதே சமயம் அங்கு பாகுபாடு இல்லாமல் மனித நேயத்துடன் உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசு உதவி செய்யும் பொழுது இலங்கையில் தமிழர்களின் பகுதி மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் உதவிட வேண்டும் எனவும் கூறினார்.