December 27, 2016 தண்டோரா குழு
மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் அண்ணாநகரில் நடைபெற்றது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். நீண்டநேரம் கருத்துகள் பரிமாறப்பட்டன. அதில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்திலிருந்து மதிமுக விலகிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தோழமையும் நட்பும் தொடரும். இதற்கு அடையாளமாக டிசம்பர் 30-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள நல்லகண்ணு பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் நூல்கள் வெளியிடப்படுகின்றன.
எழுத்தாளர் ஜீவபாரதி எழுதிய நல்லகண்ணு பற்றிய நூலை நான் வெளியிடுகிறேன். அந்நிகழ்ச்சியில் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கிறோம்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும் காவிரியில் தண்ணீர் விடாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் உதாசீனம் செய்ததாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. ஆகையால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, எனது தலைமையில் மதுரையில் ஜனவரி 6-ம் தேதி போராட்டம் நடைபெறும்.
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது.உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தோழமையும், நட்பும் என்றும் தொடரும்.இவ்வாறு வைகோ கூறினார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தாலும் கூட்டமைப்பு தொடரும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து வைகோ மோடிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
ஆனால், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று வைகோ அறிவித்துள்ளார்.