April 16, 2022 தண்டோரா குழு
ஆண்டுதோறும் பாம்புக்கடியால் இந்தியா முழுவதும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என பாம்புக்கடி ஆராய்ச்சியாளர் சக்திவே வையாபுரி கூறியுள்ளார்.
உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.மேலும்,5 லட்சம் பேர் நிரந்தர உடல் குறைபாடு அடைகின்றனர் பாம்புக்கடியால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த செலவிலேயே சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில்,இந்தியாவிலேயே முதல் முறையாக பாம்புக்கடிக்கென காப்பீட்டுத் திட்டம் மிகக்குறைந்த விலையில் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பாம்புக்கடி ஆராய்ச்சியாளருமான சக்திவே வையாபுரி செய்தியாளரிடம் கூறியதாவது,
நாங்கள் கடந்த 18 ஆண்டுகளாக பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாம்புக்கடி என்பது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களும் பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர்.
தேசிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்சனையில் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு என்பது இல்லை.இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விஷப்பாம்புகளின் வகைகள், பாம்புக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் அதற்கான உரிய முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள்,பொது இடங்கள், காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் இதுவரை 7 கோடி மக்கள் மத்தியில் பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு ரூ 1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் பாம்புக்கடி சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டம் இருந்தாலும்,அதில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே பயனடைவார்கள்.இதனால் பாதிப்புக்கு உள்ளான பலரும் தங்களது சொந்த செல்விலேயே சிகிச்சை பெறுகிறார்கள். இதனால் இம்மக்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பாம்புக்கடிக்கான காப்பீட்டுத் திட்டம் பல நிறுவனங்களிடம் இல்லை என்ற நிலையில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற நிறுவனம் இத்திட்டதை செயல்படுத்தியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.நானும் கிராமத்திலிருந்து வந்துள்ளேன் என்பதால்,திடீரென ஏற்படும் இது போன்ற பிரச்சனைகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ளேன்.எனவே லாப நோக்கங்களை புறந்தள்ளிவிட்டு இத்தகைய உயிர் காக்கும் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறோம்.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு வெறும் ரூ. 472 என்ற பிரீமியத்தில் மக்கள் ஒரு லட்சத்திற்கான பாம்புக்கடிக்கான சிகிச்சை மற்றும் உயிரிழப்பு மற்றும் உடல் உறுப்பு இழப்புக்கான காப்பீட்டைப் பெற முடியும்.இத்திட்டங்கள் மூலம் பாம்புக்கடிக்கு மட்டுமல்லாமல் பிற விபத்து சிகிச்சைகளையும் பெற முடியும்.அரசியல் கட்சித் தலைவர்கள். தொழிற்சாலை உரிமையாளர்கள், பெரு விவசாயிகள் தங்கள் பணியாளர்களுக்கு இந்த காப்பீட்டை வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்த தகவல் தெரிந்த ஒவ்வொரு தனிநபரும் இது குறித்த விழிப்புனார்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார்.