April 18, 2022 தண்டோரா குழு
பல்வேறு துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் பொது விநியோக துறையை தனி துறையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்மணியம் கோவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கவன ஈர்ப்பு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது.மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இதில், தமிழ் நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பல்வேறு துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் பொது விநியோக துறையை ஒரு துறையின் கீழ் செயல்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.அந்த அறிவிப்பை அமுல்படுத்தி ஒரு துறை என்பதற்கு பதிலாக தனி துறையாக அறிவிக்க வேண்டும் எனவும்,அவ்வாறு அறிவித்தால் இந்தியாவிலேயே இந்த திட்டம் சிறப்பு மிக்க திட்டமாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பட்ட அவர், பி.ஓ.எஸ். என்று சொல்லக்கூடிய விற்பனை முனையம் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் மோடம் வழங்கப்பட்டு இணைய சேவை மேம்படுத்தப்பட வேண்டும் என கேட்டு கொண்டார்.கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக ரேசனுக்கு தனி துறை, அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 17 சதவீத அகவிலைபடியை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்,ரேசனுக்கு வழங்கப்படும் பொருட்களை சரியான அளவில்,சரியான எடையில் வழங்க வேண்டும்,மேலும் பொருட்களை பொட்டலங்களாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட,16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.