April 19, 2022 தண்டோரா குழு
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைவுப்படுத்திட கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில், எல்எம்டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் பல மாதங்களாக தூண்களுக்கு இடையே காங்கீரிட் அமைக்கும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து வருகின்றன.
கோவை- மேட்டுப்பாளையம் சாலை ஊட்டி, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.இதனிடையே மேம்பால பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்று பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
‘‘பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளன. அப்பகுதிகளில் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பறக்கிறது. உடனடியாக சாலைகளை சீரமைத்து தர வேண்டும். உடனடியாக மேம்பால பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்’’ என்றனர்.