April 19, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரங்களில் உள்ள சேதமடைந்த மரக்கிளைகளை அகற்றி இயந்திரம் மூலம் துகள்களாக்கி அதே மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு டிராக்டர் மற்றும் மரக்கிளைகளை துகள்களாக்கும் இயந்திரம் என அனைத்து மண்டலங்களிலும் டிராக்டர்கள் ரோந்து செல்கின்றன.அப்போது சேதமடைந்த மரக்கிளைகள், காய்ந்த மரக்கிளைகள்,இலைகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அந்த இயந்திரத்தில் போடுகின்றனர்.
உடனடியாக மரக்கிளைகள், இலைகள் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் அனைத்தும் அதே மரத்திற்கு உரமாக போடப்படுகின்றன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று விழும் தருவாயில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக மரங்கள் வறண்டு மரக்கிளைகள் காய்ந்து வருகின்றன. அவ்வாறு உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது’’ என்றார்.