April 20, 2022
தண்டோரா குழு
கோவையில் பேரன் வங்கி கணக்கிற்கு ஒய்வூதிய பணத்தை அனுப்புவதாகவும், தனக்கு பேரன் பணம் கொடுக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக 80 வயது மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சூரியநாராயணன் இவரது மனைவி ராஜம்மாள். சூரியநாராயணன் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் சூர்யநாராயணன் உயிரிழந்தாக தெரிகிறது.இதையடுத்து ராஜம்மாள் தனியாக வசித்து வருகிறது.
சூரியநாராயணன் இறந்த பிறகு அவரது மகன் வழிப் பேரன் ராகவன் ஓய்வு ஊதியம் பெற்று தருவதாக கூறி உள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக எந்த ஓய்வூதிய பணமும் வரவில்லை.இதனால் சந்தேகமடைந்த ராஜம்மாள் வங்கிக்கு சென்று கேட்டபோது 4 மாதங்களாக ராகவன் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையறிந்த ராஜம்மாள் பலமுறை பேரன் ராகவனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. இதுகுறித்து புகார் அளிக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ராஜம்மாள் கண்ணீர் மல்க தனக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து விவரித்தார்.பீளமேட்டில் தனியாக வசித்து வருவதாகவும், தனது பேரனை சிரம்ப்பட்டு படிக்க வைத்த நிலையில் இப்போது அவர் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். ஆனாலும் ஓய்வூதியத்தை வழங்காமல் அவரது வங்கி கணக்கை கொடுத்துள்ளதாகவும், இது குறித்த கேட்க வீட்டிற்கு போனால் மருமகள் விரட்டியடிப்பதாக தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக புகார் அளிக்க வர சுமார் 2000 ஆயிரம் வரை ஆட்டோ செலவு ஆவதோடு 80 வயதில் தினமும் அலைய முடியவில்லை என தெரிவித்தார்.