April 21, 2022 தண்டோரா குழு
கோவையில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக புலுக்கம் தாங்க முடியாமல் கொசு கடியில் மக்கள் செய்வதறியாது திணறியதோடு பள்ளி மாணவர்கள் வீட்டு பாடங்களை கற்பதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் போதுமான காற்றோட்டம் இல்லாமல் புலுக்கமாகவே காணப்படுகின்றனர்.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது.
குறிப்பாக கோவை புறநகர் பகுதியான கோவில்பாளையம், குரும்பபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கள்ளிபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் புலுக்கம் தாங்க முடியாமல் கொசு கடியில் மக்கள் செய்வதறியாது திணறினர்.தொடர்ந்து மின்வெட்டு காரணமாக தினந்தோறும் பள்ளி மாணவர்கள் வீட்டு பாடங்களை கற்பதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஒரு வாரமாக இருளில் சிக்கி தவிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் மெழுகு வர்த்தி விளக்கை பயன்படுத்தி கொண்டு முன்னோர் காலத்தில் இருந்த வாழ்க்கைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.