April 25, 2022 தண்டோரா குழு
வெள்ளலூர் பேரூராட்சியில் பிரதமர் புகைப்படத்தை திமுக கவுன்சிலர் அகற்றிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினரால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டினர். இதனை அடுத்து அங்கு வந்த திமுக கவுன்சிலர் கனகராஜ் அதனை அகற்றினார். இதனால் பாஜகவினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வந்த பாஜகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் காவல்துறையினர் அலுவலக வாயிலை அடைத்தனர். இதனால் பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இன்று வந்த பாஜக வினரில் ஒரு குழுவினர் எஸ்.ஆர்.சேகர், உட்பட சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயும் மற்றொரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியும் இருந்த நிலையில் வெளியில் இருந்த பாஜகவினர் கண்ட முழக்கங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினர் க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து மீண்டும் தர்ணாவில் அமர்ந்ததால் காவல்துறையினர் பாஜகவினரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.