April 26, 2022 தண்டோரா குழு
கிராமப்புற மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த உதவும் ‘அடல் டிங்கரிங்’ ஆய்வகம் கோவை ஈஷா வித்யா பள்ளியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) திறக்கப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சார்ந்த ஆய்வு முறைகளை ஊக்குவித்து புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அடல் டிங்கரிங் ஆய்வக திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இந்த ஆய்வகம் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை சந்தேக கவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் டிங்கரிங் ஆய்வகம்’ நேற்று திறக்கப்பட்டது. மாணவர்களின் மனதில் ஆர்வம், படைப்பாற்றல், கற்பனை திறன்களை வளர்ப்பதற்கு இந்த ஆய்வகம் உதவியாக இருக்கும். மேலும், அறிவியல், தொழில்நுட்பங்கள், ரோபோடிக்ஸ், இயற்பியல், கணிதம் மற்றும் பொறியியல் சார்ந்த பாடங்களை புரிந்து கொள்வதற்கும் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்குவதற்கும் சிறந்த களமாக இந்த ஆய்வகம் உதவும். இதன்மூலம், ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
ஆய்வகம் திறக்கப்பட்ட பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் ஆய்வகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.