April 26, 2022 தண்டோரா குழு
96 திரைப்பட புகழ் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ குழுவினர் நடத்தும் பிரம்மாண்ட இசை கச்சேரி கோவையில் வரும் 30 தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்ஷ்மிகாந்த் கூறியதாவது,
கொரோனா காலத்தில் வீட்டிலேயே மக்கள் முடங்கிக்கிடந்த நிலையில் வெளியில் செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கோவையில் இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் ரஷ் ரிபப்ளிக் ஈவென்ட் சார்பில் ‘தாய்க்குடம் பிரிட்ஜ் ’ இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.
கோவையில் ரஷ் ரிபப்ளிக் நிறுவனம் நடத்தும் முதல் மற்றும் மிகப்பெரிய இசைக் கச்சேரி இதுவாகும். ரஷ் ரிபப்ளிக் கோயம்புத்தூர் மக்களுக்கு பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் மூலம் சிறந்த பல்வேறு அனுபவங்களைக் கொண்டு வர முயற்சிக்கிறது.இரண்டரை ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
ரஷ் ரிபப்ளிக் நிறுவனம் சார்பில் ஏற்கனவே சோசியல் சாண்டா என்ற ஷாப்பிங் நிகழ்ச்சியை நடத்தினோம் . தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற அமைப்பினர் இசைக்கச்சேரி நடத்துகின்றனர்.இந்த இசைக்கச்சேரியை நடத்தும் தாய்க்குடம் பிரிட்ஜ் அமைப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளனர். 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா குழுவினர் தான் இந்த கச்சேரியை நடத்துகின்றனர்.
இந்த இசை நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி 9 மணி வரை நடைபெற உள்ளது.டிக்கெட் விலை 500 முதல் ஆரம்பமாகிறது,இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ் ரிபளிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மது,ஆகியோர் கலந்து கொண்டனர்.