April 26, 2022 தண்டோரா குழு
கோவை பெரியகடைவீதியில் செயல்பட்டு வரும் டி.கே.மார்க்கெட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் காய்கறி பழங்கள் வியாபாரம் செய்து வந்த நிலையில் மார்க்கெட்டில் கடைகளை ஏலம் எடுத்துள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் கடைகள் அமைத்து தருவதாக முந்தைய அதிமுக ஆட்சியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு முன்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், கோவை மாநகராட்சி சார்பில் அக்கடைகளை டெண்டர் மூலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த காய்கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பினர்,
ஓராண்டாக தொழில் செய்ய முடியாமல் 88 வியாபாரிகளின் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தனர். டெண்டர் கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரை சந்திக்க சென்ற போது, ஆணையாகர் அவதூறாக பேசி தங்களை வெளியேற்றியதாக குற்றம்சாட்டினர்.
வியாபாரிகள், கடைகளை தங்களுக்கு ஒதுக்க கோரி வருகிற 5ம் தேதி கோவை அண்ணா சாலையிலிருந்து, சென்னை அண்ணா சமாதிக்கு, பாதயாத்திரையாக குடும்பத்தினருடன் சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக 30ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினர். மேலும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.