December 28, 2016 தண்டோரா குழு
“கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3500 ரூபாயாக உயர்த்த வேண்டும்” என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 2850 ரூபாய் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த தமிழக அரசின் கரும்பிற்கான ஊக்கத் தொகையைப் பார்த்தால் தற்போது அரசு அறிவித்துள்ள விலை குறைவாகவே உள்ளது.
அதிமுகவின் 2011ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையின் 2- வது வாக்குறுதியே ‘தனியார் மற்றும் அரசு கரும்பு ஆலைகள் கொள்முதல் விலையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆலை அதிபர்கள் பணப் பட்டுவாடா நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது’ என்பதுதான்.
ஆனால், கடந்த ஐந்து வருட ஆட்சியில் மட்டுமல்ல. இப்போது 2016ல் ஆட்சிக்கு வந்த பிறகும் கரும்பு விவசாயிகளுக்குக் கொள்முதல் விலை உடனடியாக கொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
கரும்பு விவசாயிகளுக்குப் பணப் பட்டுவாடா நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்த ஆட்சியில் இப்போது 2000 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் கரும்பு ஆலைகளும், அரசு கூட்டுறவு கரும்பு ஆலைகளும் சேர்ந்தே நிலுவை வைத்துள்ளன.
கரும்பு உற்பத்தி செலவு உயர்வு, பருவ மழை பொய்த்து போவது, நிலத்தடி நீர் குறைந்து வருவது, பேரிடர்களால் கரும்பு விவசாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பாதிப்புகள் உள்ளிட்ட பல காரணங்களால் கரும்பு விவசாயிகளின் எதிர்காலம் இன்றைக்கு நிலைகுலைந்து நிற்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் மாநில அரசின் ஊக்கத்தொகையாக 608 ரூபாய் வரை டன்னுக்கு வழங்கி வந்தது. ஆனால், தமிழக அரசோ மத்திய அரசு நிர்ணயிக்கும் விலை உயரும் போதும் கூட கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத் தொகையை உயர்த்தாமல் இருப்பது கரும்பு விவசாயிகளைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொங்கல் திருநாள் கொண்டாடும் முன்னரே, தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் கொள்முதல் விலை கொடுக்கவும், உடனடி உத்தரவாக தனியார் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள தொகையை வழங்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் விரைவில் அனைத்து கரும்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து திமுக போராட்டத்தில் ஈடுபடும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.