April 28, 2022 தண்டோரா குழு
கோடை வெயிலில் பறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி கோவையில் தொடங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தர்பூசணி, இளநீர், பழச்சாறு உள்பட உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்களை பொதுமக்கள் நாட தொடங்கி உள்ளனர்.
வெயில் காலத்தில் உடல் களைப்பு, உஷ்ணம் ஏற்படாமல் இருக்க சராசரியாக 4 முதல் 5 லிட்டர் தண்ணீரை மனிதன் அன்றாடம் அருந்த வேண்டும் என்பது டாக்டர்களின் பொதுவான அறிவுரையாக இருந்து வருகிறது.
விலங்குகளை பொறுத்தவரையில் நாய்கள் அன்றாடம் 2 லிட்டர் தண்ணீரும், பூனைகள் 30 மில்லி லிட்டர் தண்ணீரும் (பூனைகள் பாலை அதிகம் விரும்பும்,தண்ணீரை விரும்பாது), பறவைகளை பொருத்தவரையில் காட்டுப்பறவைகள் 400 மில்லி லிட்டர் முதல் 1 லிட்டர் தண்ணீரும், வீட்டு பறவைகள் 300 முதல் 500 மில்லி லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று கால்நடைகள் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கோடைகாலத்தில் மனிதர்களை போன்று விலங்குகளும், பறவைகளும் வெயிலால் அதிகம் களைப்படைகின்றன. அவைகள் தண்ணீருக்காக அலைய வேண்டி உள்ளது.நவீன உலகின் வளர்ச்சி, கணினி மயமான மனித வாழ்க்கையால் விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் குறைந்து, மாறாக அவைகள் மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமையே இன்று சமூகத்தில் அதிகம் அரங்கேறி வருகின்றன.
இத்தகைய சூழலில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கோடைகாலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் 5K Car Care தன்னார்வ தொண்டு நிறுவனம் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரம் வழங்கும் பணியை தொடங்கியது.
சிறுமுகை மூலத்துறை ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளியில் வைத்து பறவைகளின் முக்கியத்துவத்தையும் பற்றியும் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார் முன்னாள் மாவட்ட வன அலுவலர் சி.பத்ராசாமி அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மண் பாத்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
உடன் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் சிராஜ்தின் , ஜெனோ வில்சன் , கிராஷ்வின் , ரஞ்சித் , ஆசிரியர் பரமேஸ்வரன் 5k car care சுரேஷ் ஆகியோர் இருந்தனர்
இது தொடர்பாக வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் கூறுகையில்,
பறவைகளை பாதுகாப்போம்
ஒவ்வொருநாளும் வெட்டப்படும் மரங்களுக்கு அளவே இல்லை. தினமும் விளை நிலங்கள் வணிக வளாகமாகி விட்டது. காடுகள் பரப்பளவு குறைந்து வருகிறது. விரிவாக்கம் என்ற பெயரில் இயற்கை சிதைக்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் பறவைகளை படபடக்க வைக்கிறது. வெட்டப்படும் மரங்களால் அதில் கூடு கட்டிய பறவகைள் வழிதெரியாமல் விழி பிதுங்கி விடிவிடிய பறந்து செத்து மடிகிறது.
காலையில் இருந்த மரத்தை மாலையில் காணாது அதில் இருந்து கூட்டை எங்கே தேடுவது.இதனால் கண்ணீர் வடிக்கும் பறைவகள் ஏராளம்.தற்போது சிட்டுக்குருவிகள் காடுகளில் இருந்து ஊருக்குள் வந்தாலும் கூடுகட்ட இடமில்லாமலும், வாகன போக்குவரத்து இரைச்சல் காரணங்களால் வாழவழியின்றி அழிந்து வருகிறது.
சிட்டுக்குருவிகளைப் பற்றியும், பறவைகளை பற்றி விழிப்புணர்வு இருந்தாலும், அதற்காக பரிதாப்படும் நாம், அழிந்துவரும் பறவைகளை பற்றி கவலைப்பட மறந்து விட்டோம். எனவே இயற்கையோடு பறவைகளையும் பாதுகாப்போம்.
அனைத்து பறவைகளும் குளத்திற்கு சென்று தண்ணீர் அருந்த கூடியவை அல்ல. வெயிலின் தாக்கத்தால் குளங்களில் தண்ணீர் எளிதில் வற்றிவிடும்.எனவே பறவைகள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்படும்.வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதன் வாயிலாக அவை அழியாமல் பாதுகாக்கலாம் என்று கூறினார்