April 29, 2022 தண்டோரா குழு
டெல்லி,மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியில் 500 பேர் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் 6000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உச்சத்தில் இருந்த போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசின் தொடர் முயற்சி மற்றும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக, தினமும் 2 அல்லது 5 வரை மட்டுமே தற்போது கோவையில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனினும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வார்டு 5 பேர் வீதம் 100 வார்டுக்கு 500 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.