May 4, 2022
தண்டோரா குழு
கோவை கீரணத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை அன்னூர் வட்டம் கீரணத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் புதிய டாஸ்மாக் மதுபானக் கூடம் அமைப்பதை எதிர்த்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
அம்மனுவில், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில்மதுபான கூடம் அமைத்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் ஏற்கனவே கீரணத்தம் பகுதியில் மதுபானக் கூடம் அமைக்கும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடமும், டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடமும் கடிதம் வாயிலாக மனு அளித்துள்ளதாகவும்,மக்களின் எதிர்ப்பையும் மீறி தற்போது விவசாய நிலத்தில் மதுக்கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்,எனவே கோரிக்கைகளை மீறி மதுபானக் கூடம் அமைந்தால் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.