May 6, 2022 தண்டோரா குழு
தேசிய கயிறு வாரியம் சார்பில் “ரன் பார் காயர்” மாரத்தான் போட்டியை மத்திய அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
தேசிய கயிறு வாரியம் சார்பில் “ரன் பார் காயர்” (Run For Coir) மாரத்தான் போட்டி மத்திய அமைச்சர்கள் நாராயண் ரானே மற்றும் பானுபிரதாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காயர் போர்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம், இந்திய அரசின் கயிறு வாரியத்ததுடன் இணைந்து, தேசிய கயிறு வாரிய மாநாட்டினை நேற்று (மே 5ம் தேதி) கோவை அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடத்தியது.
75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆசாதி க அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமை விருந்தினராக பங்கேற்றார். இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா மற்றும் காயர் போர்டு தலைவர் குப்புராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக காயர் மாரத்தான் போட்டி இன்று காலை “ரன் பார் காயர்” என்ற பெயரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை நேரு விளையாட்டு அரங்கில் காலை 6.30 மணிக்கு துவங்கியது.காயர் போர்டுடன் கோவை மாவட்ட அத்லட்டிக் அமைப்பு இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தியது. இந்த போட்டியை மத்திய அமைச்சர் நாராயண் ரானே மற்றும் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் செயலாளர் பி. பி. ஸ்வைன், காயர் போர்டு தலைவர் குப்புராமு, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சைலேஷ் குமார் சிங் மற்றும் இணை செயலாளர் அல்கா அராரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் கருத்தாக்கம், “உலக வெப்பமயமாதலை மீட்க தீர்வு – கயிறு நார்” என்பதாகும்.இந்த மாரத்தான் போட்டியில் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் பிரிவு 8-ம் வகுப்புக்கு மாணவ மாணவியர்களுக்கானது. இதில் கலந்து கொண்டவர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள்.இரண்டாம் பிரிவு 9 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கானது. இதில் கலந்து கொண்ட பெண்கள் 3 கிலோ மீட்டரும் ஆண்கள் 5 கிலோ மீட்டர் தூரம் பங்கேற்று ஓடினார்கள்.மூன்றாவது பிரிவு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கானது இதில் பெண்கள் 5 கிலோ மீட்டரும், ஆண்கள் 10 கிலோ மீட்டரும் பங்கேற்று ஓடினார்கள்.
நான்காவது பிரிவு 18 – வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெண்கள் 5 கிலோ மீட்டரும், ஆண்கள் 10 கிலோ மீட்டரும் பங்கேற்று ஓடினார்கள்.இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு அரங்கின் முகப்பில் துவங்கி, நேரு விளையாட்டு அரங்கை ஒரு முறை சுற்றி, ஆபீஸர்ஸ் கிளப் வழியாக, ஏ.டி.டி. காலனி வழியாக சென்று பாலசுந்தரம் ரோடு பெண்கள் பாலிடெக்னிக் வரை சென்று மீண்டும் அதே வழியாக திரும்ப அண்ணா சிலை வரை சென்று மீண்டும் அதே பாதையில் ஏ.டி.டி. காலனி கேரளா கிளப் வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியத்தை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர்கள் பொள்ளாச்சியில் உள்ள கயிறு நார் தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.