May 6, 2022 தண்டோரா குழு
கோவை சாயிபாபா காலனி உள்ள ஏஜிஎஸ் ஹெல்த் கேர் முதலாம் ஆண்டு முன்னிட்டு முன்கள பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜிஎஸ் சமீரன் துவக்கி வைத்தார்.
நோய் வரும் முன் காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். டாக்டர் ஆதித்யன் குகன் இயக்கத்தில் 2021ல் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் ஏஜிஎஸ் மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, குடும்பத்தினரின் பொருளாதாரத்தையும், உணர்வுகளையும் காக்க இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குனர் ஆதித்யன் குகன் கூறியதாவது:
கொரோனா தொற்று காலத்தில் 1500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வீ்ட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துள்ளோம். கொரோனா தொற்றுக்குப்பின், 35 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதில் 10 சதவீதம்பேருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதங்கள் ஏற்படுவதை அறிந்துள்ளோம். இந்த கடினமான நிலையை தவிர்க்க ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
மற்றுமொரு தகவல், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 7 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டோம். ஒவ்வொரு நாளும் 50 பேருக்கு முன்பதிவு செய்து, வாரம் முழுவதும் 300 பேருக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 300 பேரில், 180 பேருக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்த நோய் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த 180 பேரில் 120 பேர் இளம் வயதினர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதேசமயம், இவர்களி்ல் பலர் ரத்த அழுத்தம், சர்க்கரையால் ஏற்படும் சிக்கல்கள் (நோயால் பாதிப்பு மற்றும் இறப்புக்கான வாய்ப்பு) பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இது அழகான வாழ்க்கையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் என்பதை உணராமல் இருக்கின்றனர். இது அவர்களின் குடும்பத்தினரில் பொருளாதாரத்தை மிகவும் பாதிப்படையச் செய்யும்.
சிரமத்துக்குள்ளாக்கும்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், முறையான சிகிச்சை அளிக்க முடியும். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய சிபாரிசு செய்கிறோம். எந்த நோயையும் வருமுன் காப்பது சிறப்பானது. முழு உடல் பரிசோதனை மட்டுமின்றி, ஒவ்வொரு வரும் உணவு முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், மந்தமான வாழ்க்கை முறை, தொற்றுக்குப்பின் ஏற்படும் விளைவுகள், மன அழுத்தம் போன்றவைகள் நாளுக்கு நாள் ஏற்படும் போட்டிகளால் வருவதை அறிந்திருக்க வேண்டும்.
நம்மை பாதுகாத்துக் கொண்டு முன்னேற வேண்டும். பதப்படுத்தப்பட்ட கார்போ ஹைட்ரேட், துரித உணவுகள், சர்க்கரை, உப்பு, மது, எந்தவகையிலுமான புகையிலை, அதிக கொழுப்புள்ள உணவுகள் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதை செய்தாலே சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை நீண்ட நாட்களுக்கு தள்ளிப்போட முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆண்டு விழா கொண்டாடும் இந்த மாதத்தில், கோயம்புத்துார் பிரஸ் கிளப் உடன் இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. தொற்று காலத்திலும் கடினமான பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களாக திகழும் பத்திரிக்கையாளர்களுக்கு , உடல் நல பாதுகாப்பு அளிக்க இது சரியான தருணம். இந்த மருத்துவ முகாமை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.சமீரான் ஐ.ஏ.எஸ்., துவக்கி வைத்துள்ளார்.
ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் துவக்கவுரையாற்றினார். தோல் மற்றும் அழகு கலை மருத்துவர் டாக்டர் ஜனனி ஆதித்யன் நன்றி தெரிவித்தார்.