May 9, 2022 தண்டோரா குழு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுமச் செயலரியல் துறையும் இந்திய உற்பத்தி செலவு மற்றும் மேலாண்மை கணக்காயர்கள் நிறுவனமும் இணைந்து “நிதித்துறையில் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் – சமகால போக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கின் தொடக்க விழா கடந்த 5ம் தேதியன்று பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக நிறுமச் செயலரியல் துறைத்தலைவர் பேரா.செ.வேதிராஜன் அனைவரையும் வரவேற்று கருத்தரங்கின் முக்கிய நோக்கங்கள் குறித்துப் பேசினார்.
அழகப்பா பல்கலைக்கழக நிறுமச்செயலரியல் துறைக்கும் இந்திய உற்பத்தி செலவு மற்றும் மேலாண்மை கணக்காயர்கள் நிறுவனத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதன் முக்கிய நோக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கணக்காயர்கள் உறுப்பினர்களின் கூட்டுப்பங்களிப்பை நிதி தொழில்நுட்பங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துதல் மற்றும் விவசாயத்துறையில் நிதித்துறை சார்ந்த தொழில்நுட்பங்களை ஈடுபடுத்துதல் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களின் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் அதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கும் கூட்டாக முயற்சி செய்தலுமாகும்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பேரா. சி. சேகர் தனது தலைமைவுரையில்,
நிதி தொழில்நுட்பம் இக்காலத்தில தினந்தோறும் நம் வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் மாணவ மாணவிகள் இந்த நிதி தொழில்நுட்பத்தை பற்றி அறிந்து கொண்டால் அதிக வேலை வாய்ப்புகளை பெறலாம் எனத் தெரிவித்தார்.
இந்திய உற்பத்தி செலவு மற்றும் மேலாண்மை கணக்காயர்கள் நிறுவனத்தின் தலைவர் பி. ராஜூ ஐயர் தனது தொடக்கவுரையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயன்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அதில் முக்கிய பயனாக ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்த உதவும் என்றும் நிதி தொழில்நுட்பம் இன்றைய விவசாயத்துறைக்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கிறது என்றார்.
இதனை தொடர்ந்து கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.சென்னை துவாரகா தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரி முதல்வர் கேப்டன் எஸ்.சந்தோஷ்பாபு தனது உரையில் நிதி தொழில்நுட்பத்தின் அம்சத்தை பற்றி விளக்கினார்.அதில் கணினி தொழில்நுட்பமும் வணிக தொழில்நுட்பமும் இணையும் போது இந்திய தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சி மேலொங்குவதோடு நிதி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது எனத் தெரிவித்தார்.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுகள் மற்றும் வணிகவியல் துறை பேரா.முனைவர் சிவேசன் சிவானந்தமூர்த்தி தனது முக்கியவுரையில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரத்தை முன்வைத்து நிதி தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார்.
இந்திய உற்பத்தி செலவு மற்றும் மேலாண்மை கணக்காயர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டலத் தலைவர் கே.ராஜகோபால் சிறப்புரையாற்றினார்.அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைப்புல முதன்மையர் பேரா. ராஜாமோகன் வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை துவாரகா தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரி அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மற்றும் மேலாண்மைத்துறை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக துவாரகா தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரி உதவி பேராசிரியர் ராகேஷ் சங்கர் நன்றி கூறினார்.