May 10, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தக்காளி வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்து உள்ளது. கேரளாவில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் கோவைக்கு பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். எனவே கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் மூலம் கோவையில் இந்த தக்காளி வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக-கேரள எல்லையான வாளையாறில் சோதனைச்சாவடி அமைத்து சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
இது நீரிழப்பு மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் வைரஸ் காய்ச்சால். பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. அதிக நோய்த்தொற்று உள்ளது, ஆனால் தன்னைத்தானே இந்த வைரஸ் கட்டுப்படுத்துகிறது.கேரளாவின் சில மாவட்டங்களில் இந்த வகை காய்ச்சால் பதிவாகியுள்ளன. வாளையார் சோதனைச் சாவடியில் பணிபுரியும் உயர் அதிகாரிகளிடம் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.