May 13, 2022 தண்டோரா குழு
நகர்புற சுற்றல் வேலை வாய்ப்புத் திட்டத்தில் புதிய பட்டதாரிகள் கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது:
வீட்டு வசதி மற்றும் நகர்புற அலுவல் அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சி தான் நகர்புற சுற்றல் வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டத்தின்கீழ் புதிய பட்டதாரிகள் தன்னம்பிக்கை பெறுவதற்கும், மாநகராட்சிக்கு புதுமையான யோசனைகளை வழங்குவதற்கும் அரிதான வாய்ப்புகளை கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம் அதிக பட்சம் ஆறுமாதங்கள் ஆகும். பயிற்சிக்கான மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம்.
மாநகராட்சியின் பணி சூழல், பட்டதாரிகளுக்கு சவாலான தளமாகும். இது அவர்களை அடுத்த நிலைக்கு தயாராக்குகிறது. தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு இந்தியா முழுவதிலுமுள்ள வாய்ப்புகளை ஒரே மேடையில் ஒருங்கிணைத்து நகர்புற நிர்வாகத்தில் விண்ணப்பிக்க இத்திட்டம் அனுமதிக்கிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி இம்மாதம் 24ம் தேதி ஆகும். ஆர்வமுள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.