May 13, 2022 தண்டோரா குழு
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு மனு ஒன்று அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
கோவையில் பம்ப்,மோட்டார், கம்ப்ரசர், ஜவுளி, வெட் கிரைண்டர், பவுண்டரி, ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு உற்பத்தி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இங்குள்ள தொழில் அமைப்புகள் சார்பில் ஸ்டீல், அலுமினியம், காப்பர்,ஸ்க்ராப்,கிராப்ட் பேப்பர், இன்ஜினியரிங் பிளாஸ்டிக் உள்ளிட்ட உற்பத்திக்கு தேவையான பல்வேறு மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசுக்கு பல முறை கோரிக்கைகளை முன் வைத்து விட்டன.
ஆனால் இதுவரை இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உதாரணமாக, மைல்ட் ஸ்டீல் பிளேட் விலையானது கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.45-ல் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ரூ.98-ஆக உயர்ந்துள்ளது. 117.78 சதவீதம் அதிகரித்துள்ளது. அலுமினியம் அலாய் கிலோ ரூ.106-லிருந்து கடந்த ஏப்ரல் மாதம் ரூ.258.91-ஆக அதிகரித்துள்ளது. 144.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல் அனைத்து வகை மூலப்பொருட்களின் விலையும் பெரும்பாலும் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வு தொடர்ந்து வருகிறது.இதே நிலை தொடர்ந்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆர்டர்கள் எடுக்க முடியாது. உற்பத்தியை நிறுத்தி விட்டு, நிறுவனங்களை மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண, உள்நாட்டு மூலப்பொருள் தேவையை எளிதுபடுத்தும் வகையில் உடனடியாக மேற்கூறப்பட்ட அனைத்து மூலப்பொருட்கள் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். உள்நாட்டில் உள்ள விலையைக் காட்டிலும் ஏற்றுமதிக்கான விலையை 10 சதவீதம் அதிகரித்து நிர்ணயம் செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப்பொருட்களுக்கும் ஐஎஸ்ஐ தரச்சான்று கோரக்கூடாது.
மேலும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதுடன், அதோடு புறநகர் ரயில் சேவை திட்டத்தையும் கோவைக்கு கொண்டு வர வேண்டும். தவிர, கோவை மற்றும் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு நள்ளிரவு நேர புல்லட் ரயில் சேவையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டு வர உதவியாக பிணையில்லா வங்கிக்கடன், கடன் தொகைக்கான உச்சவரம்பை அதிகரிப்பது உள்ளிட்ட உதவிகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.