May 14, 2022 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக நோயாளி ஒருவருக்கு 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தி இருதயப் பிரிவு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
கோவையை சேர்ந்த ஏ.முருகானந்தம் (60) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருதயம் பாதிப்பு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் இருதயத் துடிப்பு 40 வரை மட்டுமே இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து முதியவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டது.பெரும்பாலும் இருதயத்தின் ஒரு அறையில் மட்டுமே பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும்.
ஆனால், முதியவருக்கு இருதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததால் இரண்டு பேஸ்மேக்கர் பொருத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி வலது வெண்ட்ரிக்கள் மற்றும் வலது ஏட்ரியம் ஆகிய இரு அறைகளிலும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது இருதயத் துடிப்பு சீராகியுள்ளது. நோயாளியும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நிலையில் உள்ளார்.
இது போன்ற இருதய துடிப்பு மிகவும் குறைவது முதிர்வு, ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் அடைப்பு ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. பேஸ்மேக்கர் கருவி பொருத்துவதால் மீண்டும் இருதயத் துடிப்பு சீராக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும்.அரசு மருத்துவமனையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. எங்கள் மருத்துவமனையில் இதுவரை 15 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.